யுக அவதாரி குரு மஹராஜருக்கு,
குருதேவா! நின் தாமரைப் பாதங்களுக்கு எங்களுடைய அனந்தகோடி நமஸ்காரங்கள்!
குழம்பியுள்ள எங்களை இடையறாத உற்சாகத்துடன் தெளிவுபடுத்தி ஊக்குவித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு எங்களுடைய கடலளவு புகழாரங்களும் கடுகளவே. உயர உயரப் பறந்தாலும் பரந்த வானத்தை எட்ட முடியாத குருவியின் நிலையே எங்களுடைய நிலையும். எல்லையற்ற வானமும் எல்லையற்ற பூமியும் அனைத்திற்கும் அடைக்கலமாக இருப்பதைப் போலவே கதியற்ற ஆத்மாக்களாக தகித்துக் கொண்டிருக்கும் எங்கள் அனைவருக்கும் கற்பகவிருட்ச நிழல் தங்களுடைய தாமரைப் பாதங்கள் மட்டுமே. வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்தருளி அனைவரையும் உமது நேசக் கரத்திற்குள் அரவணைத்து வழிநடத்திச் செல்லும் தங்களுடைய அன்பிற்கு ஈடு இவ்வுலகிலும் எவ்வுலகிலும் எதுவும் நிகராகாது.
போரட்டம் நிறைந்திருந்த பூமியில் தங்களுடைய பிறப்பின் காரணமாக உண்டாகிய தன்னிச்சையான அமைதியே உலகிற்கு சர்வமங்களத்தை வழங்கவல்ல தங்களுடைய அவதாரத்தை உறுதிபடுத்தியது. வாடியிருந்த வைஷ்ணவ சம்பிரதாயத்தை தழைத்தோங்கச் செய்யவந்த பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிரம்ம மத்வ கௌடீய சம்பிரதாயத்தை மேன்மேலும் தழைத்தோங்கச் செய்வதற்காகவே அவதரித்துவந்த பக்திவேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதரின் செயலாக்க வடிவே, நின் யுக அவதாரம் மிக இரகசியம் எனினும் தீனர்களாகிய எங்களுக்கும் நின் கருணை மழையில் இடம்தரும் தீனபந்துவே. வழிவழியாக தொடரும் முந்தைய உயர் ஆச்சாரியர்களின் அடிச்சுவட்டில் மாறாது அடியெடுத்து வைத்து பூமி மாதாவை பெருமைபடுத்திக் கொண்டிருக்கும் கருணாசாகரமே நின் தாமரைப்பாதங்களே எங்களின் புகலிடம்.
தங்களுடைய சுய சரிதத்தை படைப்பதற்கு தங்களின் அனுமதியை எதிர்நோக்கிய பக்தர்களுக்கு தங்களுக்கே உரித்தான பணிவின் காரணமாக தாங்கள் அனுமதியளிக்கவில்லை. ஆனால், தங்களுடைய உயர் மகிமை வெளிவருவதின் மூலமாக வைஷ்ணவ சித்தாந்தம் அதாவது பக்தித்தொண்டானது உள்ளங்கை நெல்லிக் கனிபோல அனைவருக்கும் மிக எளிதாக தெளிவுபடுத்தப்படும் என்பதால் ஸ்ரீல பிரபுபாதரே பக்தரின் கனவில் தோன்றி அதனை எழுதப் பணித்தபோதே தாங்களும் குருவின் கட்டளையை உயிர்மூச்சாக ஏற்று அதற்கு சம்மதித்தீர்கள். என்னே தங்களுடைய குரு பக்தி. தங்களுடைய குரு பக்திக்கு நிகர் ஏதுமில்லை.
கலி யுகத்திற்காக பகவான் ஸ்ரீ சைதன்யரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கிருஷ்ண உணர்வை எழுச்சிபெறச் செய்வதாகிய உற்சாகமான ஹரே கிருஷ்ண மஹா மந்திர உச்சாடனத்தை சிங்கம் போல பிளிறி அனைவருடைய இதயக் களங்கங்களையும் பறந்தோடச் செய்து கொண்டிருப்பவராகிய தங்களுடைய உற்சாகமே அனைவருடைய இதயத்திலும் ராதா கிருஷ்ணரின் தெய்வீகப்பிரேமையை நிலைநாட்டிக் கொண்டுள்ளது. ஸ்ரீமதி ராதையின் பிரேமையை வெளிப்படுத்தும் கௌராங்கரின் பேரன்பிற்குரியவர் பிரேமையின் ஸ்வரூபமாக வலம்வருவது ஈரேழு பதினான்கு லோகத்தினற்கும் கிடைக்காத அரிய பொக்கிஷமன்றோ? ஆனால் துரதிர்ஷ்டசாலிகளான நாங்கள் தான் அந்தப் பொக்கிஷத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கத் தெரியாமல் காலத்தின் கோரப்பிடிக்குள் சிக்கிக்கொண்டு இன்பமென கருதி துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்யிற்கு அலையும் முட்டாளைப் போல நாங்கள் கையில் பொக்கிஷத்தை வைத்துக் கொண்டு குருவின் அருமை தெரியாமல் குருவின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் பாவ வாழ்வில் சுழன்று கொண்டுள்ளோம். குருவே கருணை வள்ளலாகிய தாங்களே இப்பேதைகளையும் ரட்சித்தருள வேண்டும்.
பகவான் ஸ்ரீ சைதன்யரின் உபதேசங்கள் மதசார்பற்றது. ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. அனைவரையும் உயிர்ப்பிக்க வல்லது. சகல உயிர்வாழிகளுக்கும் ஆனந்தம் அளிப்பது. அதனை உச்சரிப்பவர், கேட்பவர் அனைவருமே மேன்மையடைவர். உன்னத நிலையில் நிலைபெறுவர். பேரானந்தத்தில் திளைப்பர். அனைத்திற்கும் மேலாக கருணாசாகரமாக, பாரி வள்ளலாக, திரண்ட மேகமாக அனைவரையும் குளிர்வித்து மகிழ்வர், கௌராங்கரின் பேரன்பிற்குரியவர்களாக திகழ்வர், கௌராங்கரை முற்றிலுமாக மகிழ்விப்பவராக சிறப்புறுவர், ஒரு க்ஷணமும் பகவானைவிட்டு பிரியாது குருவுடனேயே, கௌராங்கருடனேயே வாழ்ந்திருப்பர் என்பதற்கு தாங்களே மிகச்சிறந்த உதாரண புருஷராவீர்.
ஸ்ரீமதி ஜானவி மாதாவால் 1570 ல் தொடங்கிவைக்கப்பட்ட “கேதூரி திருவிழாவின்” மூலமாக பக்தித்தொண்டிற்கு எதிரான களைகள் நீக்கப்பட்டு, வைஷ்ணவ சித்தாந்தமானது வெற்றி நடைபோடத் தொடங்கியதைப் போலவே, பிரபஞ்சத்தின் சக்கரவர்த்தியாகிய தாங்களும், அன்று முதல் இன்று வரை காலக்கணக்கிற்கும் அப்பாற்றபட்ட எண்ணிலடங்காத திருவிழாக்களை பிரம்மாண்ட முறையில் நிகழ்த்தியவாறு, சூன்யவாதத்தை விரட்டுவதில் அடர்ந்த காரிருளை விரட்டியோடச் செய்யும் சூரியனைப் போல, அசுர குணங்களை களைவதில் துஷ்டர்களை பறந்தோடச் செய்யும் நரசிம்மரைப் போல, காலத்தை வீணாக கழித்துக் கொண்டிருப்பவர்களை வெல்வதில் கபடதாரிகளான அரசர்களை வெட்டி வீழ்த்திய பரசுராமரைப் போல, குருவின் சொல்லை மீறாமல் இருப்பதில் தந்தை சொல் மீறாத இராமரைப் போல, பகவானுடன் க்ஷணந்தோறும் கூடியிருப்பதில் எப்பொழுதுமே தன்னை துன்பத்தில் வைத்திருக்குமாறு வேண்டும் குந்தி மகாராணியைப் போல, கௌராங்கரையே நினைத்துக் கொண்டிருப்பதில் கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டிருக்கும் விருந்தாவனத்து கோபியர்களைப் போல, இழிபிறவிகளாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், சூத்திரர்களுக்கும், பிராமண பந்துக்களுக்கும் உபதேசிப்பதில், தனது அன்னையாகிய தேவஹுதிக்கு உபதேசித்த கபிலதேவரைப் போல, கிருஷ்ண உணர்வை ஒன்றையே வலியுறுத்துவதில் நல்லாட்சி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்ட் யுதிஷ்டிர மகாராஜரைப் போல, தனது பக்தர்களுக்கு அன்பான தந்தையாகவும், நண்பனாகவும், அனாத ரட்சகனாகவும், இருப்பதில் பிருதாவின் மைந்தனாகிய அர்ஜுனனின் உற்ற நண்பனாக, காவலனாக, சாரதியாக வந்த கிருஷ்ணரைப் போல, உலாவந்து கொண்டுள்ள தாங்களும் எண்ணற்ற தெய்வீக திருவிழாக்களை சிறப்புற நிகழ்த்தி, வைஷ்ணவ சம்பிரதாயத்தை, வைஷ்ணவ பாரம்பரியத்தை பரந்த ஆலமரமாக வளர்ச்சிபெறச் செய்து கொண்டேயுள்ளீர்கள். இதுவல்லவா குருவிற்கான மிகச்சிறந்த குரு தட்சணை.
தனது பக்தியாலும் தெய்வீக இலக்கியங்களாலும் கோஸ்வாமிகளை நினைவுபடுத்தும் காரணத்தினால் பக்தி வினோத தாகூர் “ஏழாவது கோஸ்வாமி” என்றழைக்கப்பட்டார். அதுபோலவே, கௌராங்கரின் மீதான தங்களுடைய தன்னிச்சையான பிரேமையின் காரணமாக தங்களுடைய பெயரானது தன்னிச்சையாகவே கௌர்தன் என்று அமைந்ததாக ஸ்ரீல பிரபுபாதரால் அன்புடன் அழைக்கப்பட்டு தன்னிகரற்ற நிலையை அடையப் பெற்றுள்ளீர்கள். கௌராங்கரைப் போலவே கௌராங்கரின் மகனாகிய தாங்களும் பிரேமையை அள்ளி அள்ளி வழங்குவதில் சளைப்பதேயில்லை. அது எத்தகைய இன்பதுன்பத்திற்கு இடையிலும், தடையின்றி கடலைநோக்கி ஓடிக்கொண்டிருக்கும் கங்கையின் பிரவாகத்தைப் போன்று ஒருபோதும் தடைபடுவதே யில்லை.
பக்த வினோத தாகூரால் கண்டறியப்பட்ட பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடமாகிய யோக பீடத்தை சிறப்புறச் செய்வதற்காக, உலகறியச் செய்வதற்காக, முந்தைய ஆச்சாரியர்களின் விருப்பமாகிய அத்புத மந்திரை மஹாபிரபுவிற்கு, தமது குருவாகிய ஸ்ரீல பிரபுபாதருக்கு சமர்ப்பித்தற்காக, காலனிடமிருந்தும் தனது உயிரை மீட்டெடுத்துவந்து, ஆலய நிர்மாணப்பணியில் நமக்கு ஏற்றவழிகாட்டியாக, பக்கபலமான உறுதுணையுடன் நம்மை அரவணைத்து வழிநடத்திச் செல்லும் நமது குருவிற்கு நமது கோடானு பிறவிகளை சமர்ப்பணம் செய்தாலும் அது அணுவளவே. தரிசனம் செய்வதின் மூலமாகவே வாழ்வின் அறியாமையை அழிக்கும், பௌதிக துன்பங்களாகிய பிறப்பு, இறப்பு சக்கரத்தை நிறுத்தவல்லதாகிய அற்புதத்தை செய்யவல்லதாகிய அத்புத மந்திராகிய வேத கோளரங்கத்தை பிரபஞ்சமே வியக்கும் அளவிற்கு அலங்கரித்துக் கொண்டிருக்கும் எமது குருவின் தன்னிகரற்ற திறன் மயனின் கட்டிடக்கலை நிபுணத்துவத்தையும் தோற்கடிக்கச் செய்கிறது. நமது குருவிற்கு நிகர் குருவேதான்.
ஏழு அடி உயரமும், முழங்கால் வரை நீண்டதான கரங்களை உடையவரும், பொன்னிற மேனி கொண்டதால் கௌராங்கர் என்றழைக்கப்படுபவருமான பகவான் ஸ்ரீ சைதன்யரை காண்பதின் மூலமாக ஒருவர் நாம ஸங்கீர்த்தன இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார் என்பதை இடையறாது எங்களுக்கு எடுத்துரைத்து ஊக்குவித்துக் கொண்டுள்ள தங்களுடைய தெளிந்த நீரோடை போன்றதான தெள்ளத் தெளிவான குரலோசையானது எங்களது இதயங்களை ஊடுருவி தன்னிச்சையாகவே தங்களது மலர்ப்பாதங்களில் எங்களை சரணடையச் செய்கிறது. இதுவல்லவோ தங்களின் அபாரக்கருணை.
பகவான் ஸ்ரீ சைதன்யரின் ஸங்கீர்த்தன இயக்கமானது கிருஷ்ண பக்தித்தொண்டில், கிருஷ்ணருக்கான அன்பான சேவையில் மக்களை பயிற்றுவிப்பதற்காகவே இருப்பதாகும். தனக்கான பக்திசேவையை பகவானே பக்தனாக நேரில் வந்து நமக்கு கற்றுத்தருகிறார் என்கின்ற பிரபுபாதருடைய கூற்றை உலகினர் அனைவரும் அறியவேண்டும், புரிந்து கொள்ளவேண்டும், கடைபிடிக்க வேண்டும், பௌதிக உலகின் மூவித துன்பங்களிலிருந்து வெளிவர வேண்டும் என்ற நோக்கத்திற்காக எவருமே நினைத்தற்கரிய உடல் அசௌகரியத்திற்கு இடையிலும் உலகை வலம்வந்து கொண்டுள்ள நமது குருவின் அதீத சாகசம் வரலாற்று சாகசங்கள் அனைத்தையும் முழுமையாக தோற்கடித்து மிளிர்கிறது.
யாரொருவர் பகவான் ஸ்ரீ சைதன்யரின் பக்தர்களாக இருக்கின்றனரோ அவர்கள் ஒரே நேரத்தில் கோலோக விருந்தாவனத்திலும், ஸ்ரீ சைதன்ய லீலையிலும் பங்கு கொண்டவர்களாகின்றனர். கோலோக விருந்தாவனத்தில் நான்கு நுழைவாயில்கள் உள்ளன, விருந்தாவனம், மதுரா, துவாரகா, மற்றும் ஸ்வேதத்வீபம் ஆகியனவாகும். ஸ்வேதத்வீபமே பகவான் ஸ்ரீ சைதன்யரின் வாசஸ்தலமாகும். கிருஷ்ண லீலையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கிருஷ்ணருடைய கருணையைப் பெறுவதற்காக கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தாக வேண்டும், ஆனால் கௌராங்கரோ கிருஷ்ணரைவிட மிக மிக கருணைவாய்ந்தவராவார், அவர் எவரும் கேட்காமலேயே கிருஷ்ண பிரேமையை அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டுள்ளார் என பகவான் ஸ்ரீ சைதன்யரின் பக்தர்களாக இருப்பதின் மகிமைகளே விவரிக்கும் குருவானர் பகவான் ஸ்ரீ சைதன்யரின் கருணை உள்ளத்தையும் விஞ்சும் அளவிற்கு, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழிக்கேற்ப முந்தைய ஆச்சாரியர்களின் கருணை உள்ளங்கள் அனைத்தையும் விஞ்சும் அளவிற்கு, அவர்களுடைய கருணை உள்ளங்களின் ஸ்வரூபமாக உலகம் முழுவதும் பவனிவந்து துன்பக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கதியற்ற ஜீவன்கள் அனைவரையும் கரையேற்றி தனது குருவின் தாமரைப் பாதபடகில் ஆனந்தமாக உல்லாசிக்கச் செய்து கோலோக விருந்தாவனத்திற்கு சிரமமின்றி அழைத்துச் சென்று கொண்டுள்ளார். குருவின் பொற்பாத கமலங்கள் நமது இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்க குருவே அருள்புரிய வேண்டும்.
ஒருவர் தனது உயர் அதிகாரியான குருவின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், ஏனெனில் நாம் மனதின் சொல்படி நடந்தோம் என்றால் அது தனது வாதத்தை நியாயப்படுத்துவதற்காக எண்ணற்ற காரணங்களை முன்வைக்கும், நம்மை குருவின் நல்லுபதேசத்திலிருந்து திசை திருப்புவதற்காக எதனையும் நியாயப்படுத்தி இறுதியாக நம்மை முக்குணங்களின் பிடிக்குள் சிக்கவைத்து நமது பௌதிக பிரச்சனையை அதிகப்படுத்திவிடும், இதிலெல்லாம் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமெனில் குருவின் உபதேசங்களில் மட்டுமே நமது மனதை ஈடுபடுத்த வேண்டும், பழக்க வேண்டும், என்கின்ற தங்களுடைய உபதேச அமிர்தத்தை எங்களுடைய செவிகளில் உள்வாங்கி இதயப்பூர்வமாக அதனை ஏற்று செயல்படுத்துவதற்கு தடையாக உள்ள எங்களுடைய அனர்த்தங்கள் அனைத்தையும் நீக்கி, அதனை கருத்தில் கொள்ளாமல் தங்களுக்கே உரித்தான கருணைப் பார்வையால் எங்கள் அனைவருக்கும் அடைக்கலம் அளியுங்கள் குருதேவா. தங்களுடைய மலர்ப்பாதங்கள் ஒன்றே எங்களுக்கான பாதுகாப்பான இருப்பிடமாகும்.
வர்ணாஷ்ரம தர்மத்தை கடைபிடிக்காதவர்கள் பக்தராக இருப்பதில் பயனில்லை, மாறாக, அவர்கள் நரக நிலைக்கே இழிவடைகின்றனர். வர்ணாஷ்ரம தர்மத்தின் உண்மையான நோக்கம் ஒருவர் தனது செயல்களின் பலனை கிருஷ்ணருக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதே, இந்நிலையில், கிருஷ்ணருக்காக செயல்படாதவரால் உண்மையான பலனை அடையமுடியாது, அவர் துயரத்தையே அடைகின்றார். மேலும் சில நேரங்களில் நாம் மாயையில் ஆழ்த்தப்படுவதும் கிருஷ்ணரை நாம் முழுமையாக சரணடையவேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பதற்காகவே என்பதால், மாயையில் நாம் ஆழ்த்தப்படும் போதெல்லாம் இதுவும் அவளுடைய கருணையே என்றே நாம் மனதார நன்றி சொல்லி நமது மனதை முழுமையாக கிருஷ்ண தாமரைப் பாதங்களில் பதியச் செய்யவேண்டும் என்று உபதேசிக்கும் நமது அன்பார்ந்த, பிரியமான, நேசமான, பாசமான, கனிவான, கண்ணியமான, ஆனந்தமயமான, பிரேமானந்த ரூபமான குருவின் பொற்பாத கமலங்களில் கோடானனு கோடி கோடானு கோடி கோடானு கோடி, கோடானு கோடி நமஸ்காரங்களை சமர்ப்பித்து தங்களுடைய கருணாசாகர பாதகமலங்களில் இந்த தாசிக்கும் இடமளிக்க வேண்டி பணிவுடன் ஏங்கிநிற்கும் தங்களுடைய தாஸானு தாஸானு தாஸானு தாஸானு தாஸியான
கந்தர்விகா மோஹினி தேவிதாஸி மற்றும் குடும்பத்தினர்கள்
சுனந்தவாசுதேவ தாஸ்
சபரிகிரிஷ்
கௌரிலக்ஷ்மி
சிவேஷ் குமார்
மற்றும் துறையூர் இஸ்கான் உறுப்பினர்கள்.
ஹரே கிருஷ்ண
நிதாய் கௌராங்கா
ஜெய் குருதேவ்
வியாசபூஜா மகோத்ஸவ் கீ ஜெய்
ராதா ரமணா கீ ஜெய் ஜெய்!!
Gāndharvikā Mohinī Devī Dāsī (dīkṣā)
India (Thuraiyur)