மரியாதைக்கும் அன்பிற்கும் உரியவரான எமது குரு மஹாராஜர் ஸ்ரீல ஜயபதாகா ஸ்வாமியின் கருணையை யாசிக்கும் 75 வது வியாசபூஜை சமர்ப்பணம்
பிரபஞ்சமனைத்திற்கும் புகலிடமாக உள்ள ஸ்ரீமத் ஜயபதாக ஸ்வாமியாகிய எமது குருவின் பொற்பாத கமலங்களுக்கு க்ஷணந்தோறும் கோடானு கோடி நமஸ்காரங்களை சமர்ப்பித்தாலும் அது நிறைவாகாது. ஏனெனில் எமது குருவின் பொற்பாத கமலங்களின் மகிமைகளுக்கு நிகர் எங்கும் எப்போதும் எதுவுமில்லை. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உள்ளுணர்வாக அவதரித்துள்ள எமது குருவின் இனிமையான பரவசமிக்க கீர்த்தனத்திற்கு நிகர் பாரில் எதுவுமில்லை. தனது கருணைமயமான பார்வையின் மூலமாக பாவிகளான தீனர்களின் மீது இடையறாது பொழியப்படும் அவருடைய அன்பிற்கு நிகர் இந்த பாரில் எதுவுமில்லை. எதுவுமில்லை எதுவுமில்லை எதுவுமில்லை. எமது குருவின் கருணைக்கு நிகர் எதுவுமில்லை.
எமது குரு அனைவரிடத்தும் மிக்க அன்புடையவர். எமது குரு யாரையும் பகைப்பதில்லை. எமது குரு உண்மையானவர். எமது குரு அனைவரிடமும் சமமாக நடந்து கொள்பவர். எமது குருவிடத்து யாரும் எந்த தவறும் காணமுடியாது. எமது குரு பெரிய மனதுடையவர். எமது குரு மென்மையானவர். எமது குரு எப்போதும் தூய்மையானவர். எமது குரு உடமைகள் ஏதும் இல்லாதவர். எமது குரு பிறர் நன்மைக்காக உழைப்பவர். எமது குரு அமைதியுடையவர். எமது குரு எப்போதும் கிருஷ்ணரைச் சரணடைபவர். எமது குரு பௌதிக ஆசைகள் இல்லாதவர். எமது குரு எளிமைமிக்கவர். எமது குரு உறுதிமிக்கவர். எமது குரு புலன்களை அடக்கியவர். எமது குரு அளவுக்கு அதிகமாக உண்ணாதவர். எமது குரு பகவானின் மாயா சக்தியினால் பாதிக்கப்படாதவர். எமது குரு அனைவருக்கும் மரியாதை அளிப்பவர். எமது குரு எவரிடத்தும் தனக்கு மரியாதையினை எதிர்பாராதவன். எமது குரு சிறந்த சிந்தனையாளர். எமது குரு கருணைமிக்கவர். எமது குரு நட்புமிக்கவர். எமது குரு கவிதைத் தன்மை உடையவர். எமது குரு தேர்ந்தவர். எமது குரு மௌனம் உடையவர். இவ்வாறாக வைஷ்ணவ நற்குணங்கள் அனைத்தும் நூறு விழுக்காடு முழுமையாகப் பெற்றுள்ள எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
முதலைகள் கொடிய மிருகங்கள் என்றபோதிலும் நீரிலிருந்து நிலத்திற்கு வந்தனவென்றால் ஆற்றல் இழந்து போய்விடுகின்றன. நீருக்கு வெளியே இருக்கும்பொழுது அவை தமது உண்மைச் சக்தியினை வெளிப்படுத்த முடியாதவையாகின்றன. அதுபோல் எமது குருவின் அன்பாகிய அடைக்கலத்தில் இருப்பவர் எவராலும் தமது ஸ்வரூப நிலையில் எளிதாக நிலைபெற்றிருக்க முடியும். அவ்வாறு அடைக்கலம் பெறாதவரால் ஏற்கப்பட்டுள்ள மாயையின் அடைக்கலத்தைப் பற்றி சொல்லத்தான் வேண்டுமா? மாயையும் அஞ்சும் எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
நந்த மஹாராஜர் யஷோதை அன்னையின் இல்லத்தில் எண்ணற்ற சேவகர்கள் இருந்தபோதும் யஷோதை அன்னை கிருஷ்ணருக்காக வெண்ணைய் எடுப்பது, பால் காய்ச்சி தருவது, நீராட்டுவது, அலங்கரிப்பது, உணவூட்டுவது என அனைத்து சேவைகளையும் தானே முன்நின்று கிருஷ்ணரைப் பற்றிய லீலைகளை இடையறாது சிந்தித்து பாடியவாறே ஆனந்தமுடன் மேற்கொண்டு கிருஷ்ணரை மகிழ்விப்பாள், அதனால்தான் கிருஷ்ணரும் அவளுடைய அன்பிற்கு முழுமையாக கட்டுப்பட்டுள்ளார். அதுபோல எமது குரு மஹாராஜரும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கணக்கான சீடர்கள் இருந்தபோதும் தனது கடுமையான உடல் அசௌகரியத்திற்கிடையிலும் தனது அன்புக் குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சிக்குத் தேவையான பற்பல பிரச்சார வழிமுறைகள் அனைத்தையும் தானே முன்நின்று நடத்தி தனது அன்புக்கரங்களுக்குள் அரவணைத்து போற்றிப் பாதுகாத்து வருவதால் எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
அடக்கமுடியாத மனமே உயிர்வாழியின் ஆற்றல் மிகுந்த பகைவனாவான். இதனை புறக்கணித்தாலோ அல்லது இதற்குச் சந்தர்ப்பம் அளித்தாலோ இது மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெறும் நிலையினை அடைகிறது. இருப்பினும் ஆன்மீக குரு மற்றும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்கு தொண்டு செய்வது என்னும் ஆயுதத்தினால் மனதை மிகுந்த கவனமுடன் வெற்றிக் கொள்ளலாம் எனும் உபதேசத்திற்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்து தனது சீடர்கள் அனைவரையும் மனதைக் கட்டுப்படுத்தியவர்களாக உயரச்செய்வதில் வல்லவரான எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
எமது குருவே யோக சித்திகளின் தலைவராவார். எமது குருவே ஆன்மீக அறிவியலை நன்கு அறிந்துள்ளவராவார். எமது குருவே கற்றறிந்தவர்களுள் மிகச்சிறந்தவராவார். எமது குருவே மனித சமுதாயம் அனைத்தின் நன்மைக்காகவும் பிறந்து ஆன்மீக ஞானத்தை அருள்வதற்காகவே வந்துள்ளவராவார். எமது குருவே கடவுளின் மற்றும் பக்தியின் அம்சமான தனது குருவின் நேரடியான தூதுவர் ஆவார். எமது குரு மக்களுக்குள் உறங்கிக்கிடக்கும் கிருஷ்ண பிரேமையை விழிப்புறச் செய்வதற்காகவே தன்னை உடல் அசௌகரியங்களுக்கு உட்படுத்திக் கொண்டு இந்த உடலின் நிலையாமைத் தன்மையை உணர்த்தியவாறு நம் அனைவருக்கும் அறிவொளி வழங்குவதற்காகவே பாரெங்கும் பவனி வந்துகொண்டுள்ளார். இத்தகைய முன்னுதாரண புருஷரான எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
பேராசையுடைய பந்தப்பட்ட ஆத்மாக்களாகிய நாம் பௌதீக நன்மைக்காக பௌதீக உலகிற்குள் நுழைந்து படிப்படியாக அறியாமையெனும் அடர்ந்த காட்டிற்குள் நுழைந்து புலனின்பத்தில் பித்து பிடித்தவர்களாகி அங்கிருந்து வெளியேற வழிதெரியாமல் திணறிக் கொண்டுள்ளோம். மேலும் அடர்ந்த காட்டின் அடர்ந்த அறியாமை இருளுக்குள் புலனின்பம் எனும் பல்வேறு மிருகங்களிடையேயும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் ஆன்மீக குருவிடம் அடைக்கலம் புகுந்து அவர் மூலம் பரம புருஷ பகவானிடம் சரணடைவதற்காக கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பினை யாரும் தவறவிடாதீர்கள் என்று தீர்க்கமாக உபதேசிப்பதற்காக பாரெங்கும் பவனிவந்து கொண்டுள்ள எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
தேவர்கள் தேவிகளிடம் நாம் பிரார்த்திப்பது பெரிய விஷயமல்ல. அவர்களிடம் நாம் என்ன விரும்புகிறோம் என்ன கேட்கிறோம் என்பது தான் முக்கியம். ருக்மிணி கிருஷ்ணரை விரும்பி பிரார்த்தித்தாள். அவளது விருப்பம் நிறைவேறியது. ஸ்ரீ கிருஷ்ணர் நேரில்வந்து அவளை எடுத்துச் சென்றார். இவ்வாறு நாம் எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் ஒரே எண்ணம் “கௌராங்க” “கிருஷ்ண” என்று அவர்களை எப்போதும் நினைத்திருக்க வேண்டும். அதற்காகவே பிரார்த்திக்க வேண்டும் என்று கூறி நம்மை லாவகமாக ஆன்மீகப் பாதையில் ரம்மியமாகப் பயணிக்கச் செய்யும் எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
ஆன்மீக ஞானம் என்பது “ஞான விஞ்ஞான ஸமன் விதம் “ அதாவது வாழ்வின் நோக்கமான பரம புருஷரை அறிவதே ஞானமாகும். அந்த ஞானத்தின் செயல்களே அதாவது பகவானை அடைவதற்கான, மகிழ்விப்பதற்கான செயல்களே, பக்தித்தொண்டு செயல்களே விஞ்ஞானமாகும். இந்நிலையில் பகவானை அறிவதற்கான சாஸ்திர ஞானத்தை வளர்த்துக் கொள்வதற்கு உறுதுணையாக விளங்கும் ஸ்ரீல பிரபுபாதரால் தொகுத்தளிக்கப்பட்டுள்ள பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம், சைதன்ய சரிதாம்ருதம் போன்றதான இலக்கியங்களை தெள்ளத் தெளிவாக கற்றுணர்வதற்கு மிக எளிமையாக பாட நூல்களையும் மிகச்சிறந்த ஆசிரியர்களையும் வழங்கி மாணவர்களை பக்தி சாஸ்திரிகளாவும், பக்தி வைபவர்களாகவும், பக்தி வேதாந்திகளாகவும், பக்தி ஸார்வ பௌமர்களாகவும் உயர்விக்கும் கல்வி நிறுவனத்தை நன்கு பயன்படுத்தி வாழ்க்கையை செம்மையாக்கி கொள்ளுங்கள் என்று வார்த்தைகளினால மட்டும் உபதேசித்துவிட்டு நின்று விடாமல் எழுந்து நிற்க நடக்க நன்றாக உண்ணக்கூட முடியாத நிலையிலும் தானும் படித்து பட்டம் வாங்கி அனைவரையும் படித்து பட்டம் வாங்க தூண்டிக் கொண்டிருக்கும் எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
பிரம்ம மத்வ கௌடீய சம்பிரதாயத்தின் அடிப்படைக் கொள்கைளில் ஒன்றானது புத்தகமே அடித்தளம் என்பதாகும், இதற்கான காரணம் சாஸ்திர அறிவின்றி யாராலும் எதனையும் சரிவரப் புரிந்து கொள்ளமுடியாது. என்னதான் நாம் மணிக்கணக்கான உபதேசித்துக் கொண்டிருந்தாலும் பிரபுபாதரால் தொகுத்தளிக்கப்பட்டுள்ள புத்தகத்தை கையில் வாங்கி படிப்பவர்கள் மனமாற்றம் அடைவது நிச்சயம் என்பதால், பிரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும் புத்தகம் சென்றடைய வேண்டும் புத்தகமாகிய சூரிய ஒளியால் அனைவரும் அறியாமை இருளிலிலிருந்து வெளிவரவேண்டும் என்பதற்காகவே தனது அன்பான சீடர்கள், பக்தர்கள், நலன் விரும்பிகள் என அனைவரையும் புத்தக விநியோகத்தில் ஊக்குவித்து புத்தக மாராத்தான் மூலமாக, தினசரி புத்தக விநியோகத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க வைப்பதன் மூலமாக தனது குருவிற்கான விருப்பத்தை தடையின்றி நிறைவேற்றி மகிழ்ந்துவரும் எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
“அகில ரஸாம்ருத மூர்த்தி”யாகிய ஸ்ரீ கிருஷ்ணர் நொடிப்பொழுதும் கோடானுகோடி புதுப்புது ரஸங்களை கோபியர்கள் மூலமாகவும், தனக்குப் பிரியமான பக்தர்கள் மூலமாகவும், அனுபவித்தவாறு என்றும் எப்போதும் ஆனந்தமாக காட்சியளிக்கிறார். இடையறாத தெய்வீக பரவசத்தில் மூழ்கியுள்ள பகவான் விஷ்ணுவின் பாத கமலங்களில் சேவைபுரியும் ஸ்ரீ லக்ஷ்மி தாயாரும் பகவானைப் போன்றே தனது பகவானுக்கான பாத சேவையில் புது புது ரஸங்களை பரவசங்களை அனுபவித்தவாறு ஆனந்தமாக காட்சியளிக்கிறாள். இதில் உயர் பக்தையான ஸ்ரீ மதி ராதாராணி கிருஷ்ணருக்கான நித்ய உன்னத சேவையினால் அடையும் உச்சகட்ட பேரானந்தத்தைக் கண்டு ரஸங்களின் நாயகனும் திகைத்துப் போகிறான். அதனைத் தானும் அனுபவித்து மகிழவேண்டும் என்பதற்காகவே ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவாகவும் அவதரித்து விட்டான். பகவானின் நித்ய சகாவும் பகவானின் ரஸங்களில் பங்கு கொள்வதற்காக எமது குருவாக அவதரித்து தனது அன்பார்ந்த சீடர்களுக்கும் அதனை பகிர்ந்தளித்துக் கொண்டுள்ளதால் எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
“களை எடுக்காத பயில் கால் பயிர்” என்பதற்கேற்ப ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் வழங்கப்படும் பிரேமையை வாங்கிக் கொள்வதற்கான பாத்திரம் நமது ஹ்ருதயமே என்றபோதிலும் அதில் காணப்படும் காமம், கோபம், பேராசை, மயக்கம், அறியாமை, பொறாமை எனும் ஓட்டைகளின் காரணமாக நம்மால் மஹாபிரபுவினால் வழங்கப்படும் கருணையை பெற்றபோதிலும் தக்க வைத்துக் கொள்ளமுடியாமல் திண்டாடுவதால், செழிப்புற்று வளர்ந்த போதிலும் அபராதங்கள் எனும் களைகளால் சூழப்பட்டு உண்மைப் பயிரை தொலைத்துவிட்டு பரிதவிக்கும் பாவிகளுக்கு தனது சங்கத்தை பக்தர்களின் மூலமாகவும், நேரடியாகவும் வழங்கி பட்டுப்போன பயிரையும் துளிர்க்கச் செய்து, விரைந்த கொடியாக வளரச் செய்து கோலோக விருந்தாவனத்திலுள்ள கிருஷ்ணரின் தாமரைப் பாதத்தைச் சென்றடைந்து தழுவிக் கொள்ளும்வரை அன்புடன் ஊக்குவித்துக் கொண்டேயுள்ள எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
நாம கானே ஸதா ருசி: இதுவே ஒரு முன்னேறிய பக்தனின் அறிகுறிகளாகும். அதாவது பகவானுடைய நாமங்களை உச்சரிக்கவோ அல்லது பாடவோ அயராது பற்றுக் கொண்டிருப்பார். விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளும் புனித நாமங்களின்பால் பூர்ண ஈர்ப்பை அடைந்திந்தார்கள். அதாவது 24 மணிநேரமும் உச்சரிப்பது மற்றும் கேட்பது என்பதே அந்த ஈர்ப்பு. கோஸ்வாமிகளின் பரம்பரையில் வருபவரான எமது குருவும் இரவிலும் பகலிலும், உடல் ஆரோக்கியத்திலும் உடல் அசௌகரியத்திலும், விழிப்பு நிலையிலும், உறக்கத்திலும், கனவிலும் நனவிலும், உள்ளும் புறமும், நின்றபோதும் நடந்தபோதும், அமர்ந்தபோதும் படுத்தபோதும், இன்பத்திலும் துன்பத்திலும், குழப்பத்திலும் தெளிவிலும், சண்டையிலும் சமாதானத்திலும், தனிமையிலும் கூடியிருந்தபோதிலும், பாசத்திலும் நேசத்திலும், கருணையிலும் கடுமையிலும், நிதானத்திலும் அவசரத்திலும், பொறுமையிலும் பொறாமையற்ற நிலையிலும் கிருஷ்ணரை மட்டுமே கௌராங்கரை மட்டுமே நித்யானந்ததை மட்டுமே ஸ்ரீமதி ராதாராணியை மட்டுமே அவர்களுடைய புனித நாமங்களை மட்டுமே சரணடைந்தவராக நினைத்திருப்பவராக பரவசத்துடன் பாடுபவராக ஆடுபவராக திகழ்வதால் எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
த்வத்-ப்ருத்ய-ப்ருத்ய—பரிசராக-ப்ருத்-ப்ருத்ய-ப்ருத்யஸ்ய-ப்ருத்ய: ஒவ்வொரு பக்தனும் பகவானுடைய முந்தைய பக்தனுக்கு சேவை செய்கிறான். வைஷ்ணவ ஆன்மீக குருக்கள், அதிலும் குறிப்பாக மாதுர்ய ரஸ உறவு கொண்டவர்கள் கோபிகளுக்கு சேவை செய்கிறார்கள். ஒவ்வொரு ஆன்மீக குருவுக்கும் அவருடைய சீடர்கள் சேவை செய்கிறார்கள். நவீன யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்யராகத் தோன்றினார். இவருக்கு விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளும் நேரடியாக சேவை செய்தார்கள். இந்த கோஸ்வாமிகளுக்கு கிருஷ்ணதாஸ கவிராஜர் போன்ற சீடர்கள் இருந்தார்கள். இந்த சீடர்களும் சீடர்களை ஏற்றார்கள். தெய்வத்திரு அ. ச. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் சைதன்ய சம்பிரதாயத்தின் 11 வது ஆன்மீகத் தலைமுறையில் தோன்றியவர். எமது குருவும் தனது ஆன்மீக குருவின் 11 வது சந்நியாச சீடர். அவருடைய சேவையில் இடம்பெற்றுள்ள அவருடைய சீடர்கள் பரம்பரையின் முழுமையான பாதுகாப்பையும் பேரின்பத்தையும் உணர்வதால் எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
பாப-க்ஷயஷ் ச பவதி ஸ்மரதாம் தம் அஹர்னிஸம்: “ஒருவர் பகவானை இரவும் பகலும் தியானித்தால் அவர் தீச்செயல்கள் எல்லாவற்றினின்றும் விடுவிக்கப்படுகிறார். மரண காரத்தில் ஒருவர் எதைப்பற்றி நினைக்கிறாரோ அது அவருடைய அடுத்த பிறவியைத் தீர்மானிக்கிறது. தொடர்ந்து புனித நாமங்களை ஓதுவதற்கு இது மற்றொரு காரணமுமாகும். நெருக்கடியான மரண நேரத்தில் நாம் உச்சரித்தால் சந்தேகமின்றி வீடு திரும்புவது அதாவது கடவுளிடம் திரும்புவது உத்தரவாதம். அதனால்தான் நாம-கானே ஸதா ருசி: ஹரே கிருஷ்ண என்று உச்சரிக்கவும் பாடவும் நாம் நம் ருசியை பெருக்கிக் கொள்ள வேண்டும். சாஸ்திரங்களின் இத்தகைய இரகசியமான வழிகாட்டுதல்களை தனது பிரேமை மிகுந்த கம்பீரமான குரலில் பாடி, உச்சரித்து தன்னைச் சார்ந்தவர்கள் அனைவரும் நாம ருசியில் நிலைத்து நின்று பயமின்றி ஆனந்தத்துடன் ஆன்மீகலோகத்தை அடைவதற்கு இடையறாத அரவணைப்புடன் உதவிக் கொண்டேயிருக்கும் எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
ஈஸே யதா நோ ஜித மன்ய ரம்ஹஸம் கஸ் தம் ந மன்யேத ஜிகிஸுர் ஆத்மன: நமது சினத்தின் வேகத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆகையினால் நாம் பௌதீகப் பொருட்களைப் பார்க்கும்போது நமது விருப்பு, வெறுப்பு உணர்வுகளை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் பரம புருஷ பகவான் இவ்வாறு பாதிக்கப்படுவதில்லை. படைத்தல், காத்தல், அழித்தலுக்காக அவர் பௌதீக உலகினைப் பார்க்கின்றார், அவர் துளியளவு கூட பாதிக்கப்படுவதில்லை. ஆகையினால் புலன்களின் சக்தியை வெல்ல விரும்பும் ஒருவன் பகவானின் தாமரைத் திருவடிகளைச் சரணடைய வேண்டும். ஸ்ரீமத் பாகவதத்தின் இத்தகைய உபதேசத்திற்கு முன்னுதாரணமாக தனது முழுமையான வாழ்வையும் அர்ப்பணித்து எத்தகைய சூழ்நிலையிலும் சினத்தினால் பாதிக்கப்படாமல் இருப்பதால் சினத்தின் உப விளைவுகளாகிய எவரிடமும் விருப்பு வெறுப்பு என்பதே அவரிடம் இருப்பதில்லை. அதற்கு மாறாக அனைவரிடமும் அன்பு என்பது ஒன்று அவருடைய ஆயுதமாக இருப்பதால் எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
நவ வித பக்தியின் இருப்பிடம் நவத்வீபம் ஆகும். இங்கு கர்மமும் ஞானமும் பக்திக்கு சேவை செய்கின்றன. பௌதிகவாதிகளுக்கு வேத இலக்கியங்கள் புத்தியை அளிக்கின்றன. ஆனால், அதே வேத இலக்கியங்கள் தூய பக்தர்களுக்கு கிருஷ்ணர் மீது பற்றுதலை அளிக்கின்றன. அவ்வாறே நவத்வீப தாமத்தின் நித்ய சேவகரான எமது குருவின் பாத கமலங்களுக்கு கர்மி, ஞானி, யோகி, பக்தர்கள் என அனைவருமே சேவை செய்கின்றனர். மற்றவர்கள் மகிழ்ச்சியை உணரும் வேளையில் தூய பக்தர்கள் ரஸாம்ருதக் கடலில் மூழ்கி பேரின்ப முத்துக்களை அள்ளி அள்ளி பகவானுக்கு சமர்ப்பித்து பேரின்ப ரஸத்தை அனுபவிப்பதால் எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
லோகே’பி பகவத் குண ஸ்ரவண கீர்த்தனாத் இவ்வுலகில் லௌகிக செயல்களைச் செய்தாலும்கூட சர்வேஸ்வரனான பகவானின் விசேஷ குணங்களைப் பற்றி செவிமடுப்பதாலும், உச்சரிப்பதாலும் ஒருவன் பக்தியை எய்துகின்றான். இதனை தனது செயல் போராட்டங்களுக்கு இடையிலும் இடையறாது செயல்படுத்துபவன் மரண காலத்தில் முழு வெற்றி அடைகிறான். இதற்கான பொருள் கடமையை நிறுத்த வேண்டும் என்பதில்லை. கடமைகளுக்கு இடையில் பகவானை நினைத்திருக்க வேண்டும் என்பதே. பாரத தேசத்தின் மகான்களும் மகாத்மாக்களும் இயல்பான சீதோஷ்ண நிலையை போல் (உடலின் 104 டிகிரி வெப்பத்தை 98. 6 டிகிரிக்கு கொண்டுவரவேண்டுமேயன்றி முற்றிலுமாக குறைத்துவிட்டாலும் ஆபத்தே, அதுபோல்) ஆன்மீகத்தையும் லௌகீகத்தையும் மேற்கொண்டனர். இவர்கள் மனித ஆற்றலை புலன் இன்பமென்ற வியாதிக்காகப் பயன்படுத்தவில்லை என்று பிரபுபாதர் கூறுவதைப் போல் எமது குருவும் நம் அனைவரையும் இடையறாது கௌராங்க பிரேமையில் திளைக்க வைப்பதற்காக இடையறாது கௌராங்க நாங்களை உச்சரிக்கவைத்து ஆன்மீக லௌகீக செயல்களுக்கிடையில் நம் அனைவரையும் கௌராங்க சிந்தனையில் நிரப்பிக் கொண்டுள்ளதால் எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம் ரஷிஷ்யதீதி விஸ்வாஸோ கோப்த்ருத்வே வரணம் ததா ஆத்ம நிக்ஷேப கார்பண் ஷத் விதா ஸரணாகதி: “கிருஷ்ணரிடம் முழுமையாகச் சரணடையும் ஆறு அம்சங்களான, பக்தி சேவைக்குத் தேவையானவற்றை ஏற்றுக்கொள்வது, பக்தி சேவைக்கு தேவையல்லாதவற்றை நிராகரிப்பது, பகவான் ரக்ஷிப்பார் என்று திடமாக நம்புவது, தன் ஜீவனத்திற்கு பிரத்யேகமாக கடவுளின் கருணையையே நாடியிருப்பது, கடவுளுக்கு நாட்டமில்லாதவற்றில் நாட்டமில்லாமல் இருப்பது, கடவுள் முன்பு தாழ்மையுடனும் தன்னடக்கத்துடனும் இருப்பது.” பகவானின் முன்பு தன்னடக்கத்துடன் இருப்பதற்கான அறிகுறிகள் அனைத்தையும் முழுமையாக வெளிப்படுத்தி காண்பவர்களை திகைக்க வைத்து தன்னிச்சையாக ஏற்க வைக்கும் எமது குருவிற்கு நிகர் எதுவுமில்லை.
புருஷ என்பதற்கு ஆண் உடல் என்று தவறாக நினைக்கக் கூடாது. புருஷ என்றால் அனுபவிப்பாளர். அனுபவிக்க விரும்புபவர்கள் அனைவரும் புருஷர்களே, நாம் நம்மை அனுபவிப்பாளர்கள் என்று பொய்யாக நினைத்துக் கொண்டுள்ளோம். உண்மையான அனுபவிப்பாளர் கிருஷ்ணரே என்பதை நாம் உணரவேண்டும். நாம் அனைவரும் ப்ரக்ருதி அதாவது அனுபவிப்பாளரால் அனுபவிக்கப்பட வேண்டியவர்கள். இதற்கு முன்னுதாரணமாக திகழ்பவர் ஸ்ரீ மதி ராதாராணியே. அவருடைய பாதையைப் பின்பற்றி வழிவரும் ஆச்சார்யர்களைப் பின்பற்றி நாம் என்றென்னும் கோபி பர்து பத கமலயோர் தாஸானு தாஸானு தாஸானு தாஸர்களாக இருப்பதில் பேரார்வம் கொள்ளவேண்டும் என்றும் அதற்கான கருணையை ஆன்மீக குருவிடம் யாசித்துப் பெற்று பக்தித் தொண்டு பயிற்சியில் நிலைபெறுவதற்கு விக்ரஹ வழிபாடு, நாமஹட்டா, பக்தி விருக்ஷா, பரிக்ரமா, புத்தக விநியோகம், நாம ஸங்கீர்த்தனம் போன்றவற்றினால் வழிநடத்திக் கொண்டுள்ள எமது குருவிற்கு நிகர் எவருமில்லை.
குலின கிராமவாசி ஒருவர் மஹாபிரபுவிடம், தன் கடமை யாது? அதை நான் எப்படி நிறைவேற்றுவது என்று கேட்டார். அதற்கு பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களின் சேவையில் ஈடுபடுவது, பகவானின் புனிதப் பெயர்களை ஓதுவது போன்றவற்றைச் செய்தால் பகவானின் கமல மலர்ப்பாதத்தில் சேர்வது நிச்சயம் என்றார். அடுத்ததாக அவர் வைஷ்ணவர் என்பவர் யார்? அவருடைய அடையாளங்கள் யாது என்று வினவினார். அதற்கு மஹாபிரபு, பகவானின் புனிதநாமத்தை எப்போதும் ஓதிக் கொண்டிருப்பவன் முதல்தர வைஷ்ணவன் என்றார். அதற்கடுத்த வருடம் வந்த குலின கிராமவாசிகள் இதே கேள்வியைக் கேட்டபோது அவர்களிடம் மூன்றுவிதமான வைஷ்ணவர்களைக் குறிப்பிட்டார். முதல்தர பக்தன் என்பவன் தன் இருப்பாலேயே பிறரை கிருஷ்ண உச்சரிக்கச் செய்பவன் என்றார். இவ்வாறாக மஹாபிரபு வைஷ்ணவா, வைஷ்ணவ தாரா, வைஷ்ணவ தாஸா ஆகிய மூன்றையும் விளக்கினார். இம்மூன்றின் ஒருமித்த வடிவமாக நம் அனைவரின் இதயத்திலும் குடிகொண்டு தமது இருப்பினாலேயே நம் அனைவரையும் ஆட்கொண்டு மஹாபாவியையும் ஹரி நாமத்தை உச்சரிக்கவைத்து வைஷ்ணவனாக்கிக் கொண்டுள்ள எமது குரு மஹாராஜருக்கு நிகர் எவருமில்லை. எவருமில்லை, எவருமில்லை.
குருவின் நாமத்தை சிந்தையில் இருத்தி
நகரந்தோறும் கிராமந்தோறும் பிரச்சாரம் செய்து
மானிடர்களை ஜனன மரண சுழற்சியிலிருந்து விடுவித்து
கோலோக தாமத்திற்கு பாரட்சமின்றி உயர்வித்து
குருவின் கருணைக்கு உரியவர்களாவோம்!
என்றென்றும் குருவின் சேவையில் நிலைத்து நிற்க யாசிக்கும்
காந்தர்விகா மோகினி தேவி தாஸி மற்றும்
துறையூர் பக்தர்கள் சங்கம்