Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Viśeṣvarī Gopī Devī Dāsī (Coimbatore - India)

*எனது அன்பான குரு மஹராஜரே!*

ஆதிகுருவான பகவான் பலராமரே!    நித்தியானந்த பிரபுவின் பிரதிநிதியான எனதருமை குரு மகராஜரே! தங்களது தாமரை திருப்பாதங்களுக்கு எனது கோடான கோடி நமஸ்காரங்களை பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன். தங்களது 76வது வியாச பூஜை திருநாளில் உங்களது தாழ்மையான சேவகியின் ஒரு சிறு அர்ப்பணிப்பு.

ஸ்ரீமத் பாகவதத்தில் 3.24.21 இந்த ஸ்லோகத்தையும் பொருளுரையையும் படித்துக் கொண்டிருந்த பொழுது இது அப்படியே என்னுடைய குரு மஹராஜரிடம் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டேன். நான் எந்தெந்த முறையில் வியப்படைந்தேன் என்பதை ஸ்ரீலப்பிரபு பாதரின் வார்த்தைகளில் பார்ப்போம்.

*திதிக்ஷவ: காருணிகா: ஸுஹ்ருத: ஸர்வ தேஹினாம் அஜாத சத்ரவ: சாந்தா: ஸாதவ: ஸாது பூஷணா:”*

(ஸ்ரீமத் பாகவதம் 3.25 21)

ஸாதுவின் அடையாளங்கள் என்னவென்றால், அவர் எல்லா வாழும் உயிரினங்களிடம் கொள்ளும் சகிப்புத் தன்மை, கருணை, தோழமை ஆகும். அவருக்கு எதிரிகள் இல்லை, அவர் அமைதியானவர், புனித நூல்களைப் பின்பற்றுபவர். அவரின் எல்லா தனிப் பண்புகளும்‌ ஒப்பிட இயலாதவை.

ஸாது என்பவர் பகவானின் பக்தராவார். அதனால், அவருடைய அக்கறை பகவானிடம் பக்தித் தொண்டு செய்வது பற்றிய அறிவொளியை மக்களிடம் ஏற்படுத்துவதே ஆகும். அதுவே அவர் கருணையாகும். பகவானுக்குப் பக்தித் தொண்டு புரியாத மனித வாழ்வு பாழ் என்று அவர் அறிவார். ஒரு பக்தர் நாடு முழுவதும் பயணம் செய்து, வீடு வீடாகச் சென்று, “பகவான் கிருஷ்ணரின் பக்தராக இருங்கள். உங்கள் மிருக மனப்பாங்கை  (புலனின்பத்தை) நிறைவு செய்வதால் உங்கள் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள். மனித வாழ்வு என்பது தன்னை உணர்தலுக்காக அல்லது கிருஷ்ண உணர்வு கொள்வதற்காக உள்ளது” என்று பிரச்சாரம் செய்கிறார். இவையே ஒரு ஸாதுவின் பிரச்சாரம் ஆகும். என்னுடைய குரு மகராஜர் கௌர பிரேமையை வழங்குவதற்காக உலகம் முழுவதும் அதிக முறை விமானத்தில் பயணம் செய்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஒரு சாது தன் தனிப்பட்ட வீடுபேறு பற்றித் திருப்தி அடைவதில்லை. அவர் எப்போதும் மற்றவர்கள் பற்றியே நினைக்கிறார். அவர் பாபம் செய்த அனைத்து ஆத்மாக்களின் மேல் மிகவும் கருணை காட்டுகிறார். சாதுவின் தகுதிகளில் ஒன்று காருணிகா: கீழே விழுந்த ஆத்மாக்களிடம் கருணை கொள்ளுதலாகும். பிரச்சாரத்தில் ஈடுபடும் பொழுது, அவர் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வந்தாலும் சகிப்புத் தன்மை உடையவராய் இருக்கிறார். சிலர் அவரைக் கொடுமைப்படுத்தலாம். ஏனென்றால், கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மாக்கள் பக்தித் தொண்டின் தெய்வீக அறிவைப் பெறத் தயாராக இல்லை. சில சமயம் பக்தர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்; ஹரிதாஸ தாகூர் 22 அங்காடி தெருக்களில் அடிக்கப்பட்டார்; சைதன்யப் மஹாபிரபுவின் தலைமை உதவியாளர் நித்யாநந்த பிரபு, ஜகாய் மற்றும் மதாய் என்பவர்களால் தாக்கப்பட்டார். ஆனால் அவர்கள் அக்கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டனர். ஏனென்றால், அவர்களின் சமயப் பணியே பாபம் செய்த ஆத்மாக்களைக் கடைத்தேற்றுவதாகும். எனது குரு மகாராஜரும் ஒரு பைத்தியக்காரனால் சுடப்பட்ட பொழுது உயிருக்கே ஆபத்தான நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டார்.

சர்வ-தேஹினாம் என்ற சொல் ஜட உடல்களை ஏற்றுக்கொண்ட அனைத்து உயிரினங்களையும் குறிக்கிறது. மனிதனுக்கு மட்டும் ஜட உடல் அல்ல, மற்ற உயிரினங்களும் உண்டு. இறைவனின் பக்தன் பூனைகள், நாய்கள், மரங்கள் முதலான அனைவரிடமும் கருணை உள்ளவன். எல்லா உயிரினங்களையும் இந்த ஜட உலகின் சிக்கலில் இருந்து இறுதியில் முக்தி அடையும் வகையில் நடத்துகிறான். சைதன்ய மஹா பிரபுவின் சீடர்களில் ஒருவரான சிவானந்த சேனா, ஒரு நாய்க்கு பிரசாதம் அளித்து அதற்கு விமோசனம் அளித்தார். ஒரு நாய் ஒரு சாதுவுடன் இணைந்து முக்தி பெற்றதற்கு பல நிகழ்வுகள் உள்ளன , ஏனெனில் ஒரு சாது அனைத்து உயிரினங்களின் ஆசீர்வாதத்திற்காக உயர்ந்த பரோபகார செயல்களில் ஈடுபடுகிறார். 

*வித்யா-வினய-சம்பன்னே*

*ப்ராஹ்மனே கவி ஹஸ்தினி* *சூனி

சைவ ஸ்வபாகே ச பண்டிதா ஸம

-தர்ஷின:*

(பகவத் கீதை 5.17)

அடக்கமுள்ள பண்டிதர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக கற்றறிந்த தன்னடக்கம் உள்ள பிராமணன், பசு, யானை, நாய், நாயை தின்பவன் என அனைவரையும் சமநோக்கில் காண்கின்றனர். ஏனெனில் பரம புருஷர் பரமாத்மாவின் உருவில் அனைத்து ஜீவன்களின் இதயங்களிலும் வீற்றுள்ளார். பகவானை பற்றிய இந்த ஞானமே உண்மையான ஞானம் இதை உணர்ந்த சாது அனைத்து ஜீவன்களையும் தனது நண்பராக நடத்துகிறார். மற்றவர்களின் நலனையே சிந்திப்பதால், அவர் ஸுஹ்ருத். சாதுக்கள் மாயாவின் பிடியில் இருந்து மற்றவர்களை எப்படி காப்பாற்றுவது என்று எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள் . ஒரு சாது மனிதர்களிடம் மட்டுமல்ல, பூனைகள், நாய்கள், மரங்கள், செடிகள் மற்றும் பூச்சிகளிடமும் கருணை காட்டுபவர்; ஒரு கொசுவைக் கொல்லக்கூட தயங்குவார். "என் சகோதரனை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று அவர் வெறுமனே நினைக்கவில்லை. அவர் அனைத்து உயிரினங்களையும் தனது சகோதரர்களாக பார்க்கிறார், ஏனென்றால் அனைத்து உயிரினங்களுக்கும் தந்தை கிருஷ்ணரே என்பதை அறிவார்.

ஸாதுவின் தகுதிகளில் ஒன்று அமைதியாக, புனித நூல்களின் கோட்பாடுகளைப் பின்பற்றுவார். ஏனென்றால், எல்லா சாஸ்திரங்களும் பரம புருஷ பகவானின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன. அதனால், ஸாது என்றால் புனித நூலின் ஆணைகளைப் பின்பற்றுபவர் என்றும் பகவானின் பக்தர் என்றும் பொருள். இந்த வயதிலும் தன்னுடைய சீடர்களை மட்டும் படிக்கச் சொல்லாமல் தானும் பக்தி வைபவ், பக்தி வேதாந்தா, பக்தி சார்வபௌமா போன்ற சாஸ்திர பாடங்களை படித்து பட்டம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

“மத் ஆச்ரயா: கதா ம்ருஷ்டா: ச்ருண்வந்தி கதயந்தி ச 

தபந்தி விவிதாஸ் தாபா 

நைதாந் மத் கத சேதஸ:

(ஸ்ரீமத் பாகவதம் 3.25.23)

பரம புருஷ பகவானாகிய என்னைப் பற்றிக் கேட்பதிலும், வழிபடுவதிலும், நிலையாக ஈடுபட்டிருக்கும் ஸாதுக்கள் உலகத் தொல்லைகளால் துன்பப்படுவதில்லை. ஏனென்றால், அவர்கள் எப்போதும் என் லீலைகள் மற்றும் செயல்களின் எண்ணங்களால் நிறைந்துள்ளனர். உலக இருப்பில் பல்வேறு வகைப்பட்ட துன்பங்கள் உள்ளன. உடல் மற்றும் மனதிற்குச் சம்பந்தப்பட்டவை, பிற உயிரினங்களால் சுமத்தப்படுபவை, இயற்கைத் தடுமாற்றங்களால் சுமத்தப்படுபவையாகும். ஆனால் ஒரு ஸாது அம்மாதிரித் துன்பமான நிலையால் தடுமாறுவதில்லை. ஏனென்றால், அவர் மனம் எப்போதும் கிருஷ்ண உணர்வால் நிறைந்துள்ளது, இவ்வாறு அவர் பகவானின் செயல்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேச விம்புவதில்லை. மஹாராஜா அம்பரீசர் பகவானின் லீலைகளைத் தவிர வேறு எதையும் பேசவில்லை. வசாம்ஸி வைகுண்ட குணானுவர்ணனே (பாக. 9.4.18). அவர் பரம புருஷ பகவானைப் புகழ்வதில் மட்டும் தன் சொற்களை ஈடுபடுத்தினார். ஸாதுக்கள் எப்போதும் பகவானின் அல்லது அவர் பக்தர்களின் செயல்களைப் பற்றிக் கேட்பதில் ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் கிருஷ்ண உணர்வில் இருப்பதால், ஜடவுலகத் தொல்லைகளை மறக்கிறார்கள். சாதாரண, கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மாக்கள், பகவானின் செயல்களை மறந்து, எப்போதும் கவலைகளால், உலகியல் துன்பங்களால் நிரம்பியுள்ளனர். மறுபுறம், பக்தர்கள் எப்போதும் பகவானைப் பற்றிய விஷயங்களில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் ஜட இருப்பின் தொல்லைகளை மறக்கிறார்கள்.” என்னுடைய குரு மகராஜரும் மூவகை துன்பங்களால் பாதிக்கப்பட்டு உடலில் 60 சதவிகிதத்திற்கு மேல் வேலை செய்யாமல் இருந்தும் அவர் தொடர்ந்து பிரச்சார சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். தினமும் கௌரங்க மகா பிரபுவை பற்றி எடுத்துக் கூறி அவரின் கருணையை அனைவரும் பெற வேண்டும் என்பதில் மிக ஆவலாக இருக்கிறார்.

ஹரே கிருஷ்ணா! குரு மஹராஜரே!! எத்தனையோ கோடி ஜென்மங்கள் அனாதையாய் கிருஷ்ணருடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன். உங்களின் அகாரணமான கருணையால் குருசீட பரம்பரையுடன்   என்னை இணைத்தீர்கள்.  நான் கோடி காலமாக மறந்து போயிருந்த உறவை மீண்டும் புதுப்பித்து கொடுத்தீர்கள். எனக்கும் கிருஷ்ணருக்கும் என்ன சம்பந்தம் என்பதை உங்களைத் தவிர வேறு யாரால் கொடுத்திருக்க முடியும்.  உங்களைத் தவிர வேறு யாரால் இப்படிப்பட்ட கருணையை அளிக்க முடியும். வைஷ்ணவர்கள் எல்லோருமே பர துக்க துக்கி என்பார்கள். ஆனால் நீங்கள் அதி பரதுக்க துக்கியாவீர்கள். என்னை போன்ற மிக வீழ்ந்த ஆத்மாவையும் கடைதேற்ற கூடியவர் தாங்கள் மட்டுமே.  எப்படி எனது நன்றியையும் வணக்கத்தையும் தங்களுக்கு தெரிவிப்பது,  இந்த கடனை எப்படி தீர்ப்பேன் என்று தெரியவில்லை. எப்பொழுதும் உங்கள் விருப்பத்தை அறிந்து உங்களுக்கு சேவை செய்ய கூடிய சூழ்நிலையை உருவாக்கி தருமாறு நான் ஒவ்வொரு முறையும் பிராத்தனை செய்கிறேன். என் குரு மஹராஜரின் மனநிலையை தெரிந்து அதற்கு தகுந்த மாதிரி என்னை சேவையில் ஈடுபடுத்துங்கள் என்று நித்தாய் கௌரங்கர், பக்த பிரகலாத நரசிம்ம தேவர், ராதா மாதவர், ஜகன்னாதர், பலதேவர், சுபத்ரா தேவி, சுதர்சன சக்ர தேவர் ஆகியோரிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். உங்களின் அற்புதமான லீலைகளை ஒவ்வொரு பக்தரும் சொல்ல கேட்டு மெய்சிலிர்ந்து போகின்றேன். எப்படிப்பட்ட கருணை! எப்படிப்பட்ட கருணை!   உங்களுடைய ஒரு பார்வை என்னை  இந்த பௌதீக மாயாவிலிருந்து விடுவித்து பக்தி பாதைக்கு அழைத்து வந்துள்ளது.

 நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக பல்லாண்டு காலம் நீடூடி வாழ எனது பிரார்த்தனைகளை எப்பொழுதும் கௌர நித்தாயிடமும், முந்தைய ஆச்சாரியார்களிடமும் செலுத்துவேன்.  

அன்பான குரு மஹராஜரே! நீங்கள் என் மேல் பொழிந்த கருணைக்கு கோடி கோடி வந்தனங்கள். நான் அறிந்தும் அறியாமலும் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். தங்களின் தாமரை திருப்பாதங்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும். இனிவரும் காலத்தில் அந்த மாதிரி தவறுகள் எதுவும் செய்யாமல் தூய பக்தி சேவை செய்வதில் ஈடுபடவும், இன்னும் நிறைய புதிய பக்தர்களுக்கு  கலியுக தர்மமான ஹரிநாமத்தை கொண்டு சேர்க்கும் உங்களது  விருப்பத்தை நிறைவேற்றவும் என்னை ஆசீர்வதிக்குமாறு நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி குரு தேவா! நன்றி! நன்றி! நன்றி!!

இன்றும், என்றும் தங்களது பணிவான சேவகி 

விசேஷ்வரி கோபி தேவிதாசி,

கோயமுத்தூர் 

தமிழ்நாடு, இந்தியா.