ஹரே கிருஷ்ண! குரு மஹராஜ், தண்டவத் பிரணாம். நான் இஸ்கானிற்கு வந்து ஒருவருடம் வரை 2016 லிருந்து கோயம்பத்தூர் இஸ்கானில் சேவை செய்து வருகிறேன். சுமார் ஒரு வருட காலமாக உங்களது நற்குணங்களையும், புகழையும் மற்றும் கருணை மனப்பான்மையும், மன்னிக்கும் தன்மையைப்பற்றியும் பக்தர்களிடம் கேட்டு, உங்களை மானசீகமாக குருவாக ஏற்று நான் செய்த சேவையை உங்களுக்கு அர்ப்பணித்த வருகிறேன். 2017ல்தான் நான் உங்களை நேரில் காண வாய்ப்பு கிடைத்தது. கோவை இஸ்கான் ஜெகந்நாதர் தேர் திருவிழாவிற்காக கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய செய்தி கேட்டு நான் வந்துசேர்ந்தேன். அப்பொழுது அங்கு கூடியிருந்த அனைவருக்கும் பிரசாதத்தை வழங்கினீர்கள். அதில் குறிப்பாக பக்தி சேவையில் ஈடுபடாத புதிய நபர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசாதம் வழங்கியதின் மூலம் உங்களது கருணை மனப்பான்மையினை நான் நேரில் கண்டேன். எனக்கும் உங்கள் பிரசாதம் வாங்கி சாப்பிடவேண்டும் என்று ஆசைதான். கூட்டம் அதிகமாக இருந்ததால் உங்களுக்கு தொந்திரவாக இருக்கும் என்று நினைத்து வர தயங்கினேன். பின்னர் நீங்கள் கோயிலுக்கு செல்ல தொடங்கினீர்கள். செல்லும் வழியில் ஓரிடத்தில் நின்று பிரசாதம் உண்டீர்கள். நீங்கள் உண்ட பிரசாதம் மஹாபிரசாதமாக எனக்கு கிடைக்க வேண்டும் என்றும் அது கிடைத்தால் உங்களது கருணை எனக்குக் கிடைத்ததாக எடுத்துக்கொள்வேன் என்றும் பிரார்த்தனை செய்தேன். பின்னர் நீங்கள் பிரசாதம் உண்டபிறகு கோயிலுக்கு வந்து ஜெகந்நாதரை தரிசித்தபின், ஆசிரமத்தில் உள்ள உங்களது அறைக்கு சென்றுவிட்டீர்கள். நான் வெளியே உங்களது அறைக்கு அருகாமையில் நின்று கொண்டு உங்களைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயம் உங்களது நெருங்கிய சிஷ்யர் ஒருவர் என்னை அழைத்து இந்தக் கவரில் குரு மஹராஜ் மஹாபிரசாதம் உள்ளது என்று என் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அதைப்பிரித்துப் பார்த்ததும் எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. நான் எதிர்பார்த்து பிரார்த்தனை செய்ததுபோலவே அது நிறைவேறியது கண்டு திருப்தியடைந்தேன். அன்று முதல் இன்றுவரை முழு நம்பிக்கையுடன், உற்சாகத்துடனும் கிருஷ்ண பக்தி சேவையில் இடைவிடாது ஈடுபட முயற்சி செய்து வருகிறேன்.
குருமஹாராஜ் உங்களைப்பற்றி மேலும் சில –
பகவத் கீதை 12. 13 – 14.
அத்வேஷ்டா ஸர்வ பூதானாம் மைத்ர கருண ஏவச
நிர்மம நிரஹங்கார ஸம துக: சுக ஷமி
ஸந்துஷ்ட ஸததம் யோகி யதாத்மா த்ருட நிஷ்சய:
மய்யர்பித மனோ புத்திர் யோ மத் பக்த ஸமே ப்ரிய:
யார் ஒருவர் பொறாமையின்றி, எல்லா உயிர்வாழிகளிடம் அன்புடன் நண்பனாக, தன்னை உரிமையாளனாகக் கருதாதவனாக, அஹங்காரத்திலிருந்து விடுபட்டு, இன்பத்திலும், துன்பத்திலும் சம நிலையோடு, சகிப்புத்தன்மையுடன் எப்போதும் திருத்தியுற்று, திடமான உறுதியுடன் முயன்றுகொண்டு, சுயக்கட்டுப்பாடு உடையவனாக தனது மனதையும், புத்தியையும் ஈடுபடுத்துகிறானோ, அத்தகைய பக்தன் எனக்குப்பிரியமானவன்.
குரு மஹராஜ் இந்த அனைத்து தெய்வீக குணங்களையும் உங்களிடம் நான் காண்கிறேன்.
குருவாஷ்டகம்-
யஸ்யப்ரஸாதாத் பகவத் பிரஸாதோ
யஸ்ய ப்ரஸாதாத் நகதீ குதோபி
த்யாயன் துவம்ஸ் தஸ்ய யஸ்யஸ்த்ரீ சந்த்யம்
வந்தே குரு ஸ்ரீ சரணாரவிந்தம்
குரு திருப்தியடைந்தால், கிருஷ்ணர் திருப்தியடைகிறார், குருவைத் திருப்திபடுத்தாமல், கிருஷ்ணரைத் திருப்திபடுத்த முடியாது. எனவே குருவை தினமும் மூன்று முறையாவது போற்றி துதிக்க வேண்டும். எனவே அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப்பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
குருமஹராஜ்,
கிருஷ்ண பக்தி சேவையில் 24 மணி நேரமும் உற்சாகத்துடனும், மன உறுதியுடனும் ஈடுபட வேண்டும் என்று ஆசிர்வதியுங்கள்.
இப்படிக்கு,
உங்களது கருணைக்காக காத்திருக்கும்,
சுவிக்ரஹ முகுந்த தாஸ்
கோவை – இஸ்கான்